Tuesday 16 October 2018

தாமிர புஷ்கரம் - 2018


தாமிர பரணி புஷ்கரம் பற்றி படித்ததிலிருந்தே அங்கே போகணும் ங்கிற ஆசை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்க…

ஒரு பக்கம் ஹ்ம்ம் எங்க இருந்து எங்க? நாமாவது போறதாவது என்ற அலைக்கழிப்புமாய் நகர்ந்தன நாட்கள்.

முதல்ல எனக்கு தண்ணீ ன்னா அவ்ளோ பயம். ஆறாம்ப்பு படிக்கறச்சே வைத்தீஸ்வரன் கோவில்ல நான் போட்ட கடப்பாரை நீச்சல் தான் காரணம்.

நீரின்றி அமையாது உலகுன்னு ஆயிரம்தான் சொன்னாலும் தண்ணீரைக்கண்டால் பயம் மட்டும் விலகவே விலகாது
நீரடிச்சு நீர் விலகாதுங்கிற மாதிரி நீர் கண்டு எனது பயமும் விலகாமலே இருக்கு.

நாங்க கைலாஷ் போன க்ரூப் தாமிர புஷ்கரம் போக ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து போகலாமா வேணாமா ன்னு பூவா தலையா, இங்கி பிங்கி பாங்கி,  ஒத்தையா ரெட்டையால் லாம் போட்டு ஒருவழியா கூட யாரு தெரிஞ்சவங்க வராங்க ன்னு பார்த்தா (இந்த சமயம் பார்த்து வீட்ல கொலு, கெஸ்ட் ன்னு நிறைய தெரிஞ்சவங்க ஜகா வாங்க) - வீட்ல பர்மிஷன் வாங்கறது இதை விட பெருங்காரியமாச்சே மாரியாத்தா, காளியாத்தா ன்னு நடுநடுங்கிக்கிட்டு இருக்க, [நானே எதிர்பாராவிதமா அதுகூட டக் ன்னு கிடைச்சிடுச்சு!!]

ஆனாலும் தெரிஞ்சவங்க, பழகினவங்க  கூட இல்லாம இருக்கே ன்னு……கொஞ்சம் தயக்கம். சரி பார்த்துக்கலாம் ன்னு ஒருவழியா கிளம்ப முடிவு செஞ்சப்ப, இன்னொரு எதிர்பாராவிதமா முதல் நாள் மாலை, என் தங்கை நானும் வரேன் ன்னு சொல்ல பஸ் ல டிக்கெட் ஃ புல். ஒருவழியா சமாதானப்படுத்தி அவளை அனுப்பிட்டு ரெண்டு செட் ட்ரெஸ் எடுத்து வைக்க ரெண்டு நாள் யோசனை! புறப்படும் தினத்தன்று காலை ஒரு டிக்கெட் இருக்கு ன்னு தகவல். உடனே தங்கைக்கு இன்ஃபார்ம்….அவளும் ஆனந்தமாய் கிளம்ப ஆஹா !

12.10.18 அன்று இரவு சுமார் 9.45 க்கு எங்கள் பெருமை மிகு நடராஜர் கோவிலிலிருந்து ஒரு பஸ் மற்றும் ஒருவேன் புறப்பட்டது. காலை 5.45 க்கு புளியங்குடி அருள்மிகு மீனாட்சி ஸமேத சொக்கநாதர் ஆலயம் (குற்றாலம் அருகே) என்கிற இடத்தில் நிறுத்தி - காலைக்கடன்கள் முடித்து – சுடச்சுட கா ஃபி / டீ முடித்து (இங்கெல்லாம் கோவிலை ஒட்டி பெரும் மண்டபங்கள்) கோவிலை வலம் வந்து குற்றாலம் கிளம்பினோம்.


வாழ்நாளில் முதன்முறையாக குற்றால அருவியை கண்டு அசந்து நின்றேன். எங்கிருந்து பொங்குகிறது? எப்படி பொங்கி கொட்டுகிறது எப்படித்தான் இந்த அதிசயமோ! நனைந்த சுகானுபவமோ சொல்லி மாளாது….என்னதான், பலாப்பழம் ன்னா எப்படி இருக்கும் ன்னு கேட்டா, மஞ்சளா இருக்கும், வழவழன்னு தித்திப்பா இருக்கும், வாசனையா இருக்கும் ன்னு எவ்வளவுதான் சொன்னாலும் அதை சாப்பிட்டு உணர்கிற உணர்வை கொண்டுவர முடியுமா என்ன? ஜிலீர் ன்னு வந்து விழும் அருவியின் சுகம் ஆஹா…வழுக்குமோ, வாரி விட்டுடுமோ ன்னெல்லாம் (ஹி ஹி நாலுபேருக்கு நடுவில் பப்பரப்பா ன்னு விழுந்து வைக்க நேருமோ ங்கிற பயம்தான்) பயந்து நடுங்கி…..போனா அதெல்லாம் எதுவுமில்லாம ஜோரா குளிச்சு பத்திரமா வந்துட்டோம்ல!

..
அங்கிருந்து குளியல், செல்ஃ பி இத்யாதிகள் முடிஞ்சு வந்து கோவில்.  ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அருவியை காண்பதற்கு  ன்னு பாடினது குர்றால அருவிக்கு மட்டுமில்லை;  குற்றாலநாதரை தரிசிக்கவும் ஆயிரம் கண் போதாது. அப்டியே ஜகஜ்ஜோதியா பார்க்க பார்க்க தெவிட்டாத காட்சி.
பதிகமெல்லாம் பாடும் போது அதுவும் “உற்றார் யாருளரோ உயிர்கொண்டு போகும்போது குற்றாலநாதா உன்னருளின்றி” என்ற வரிகளில் எமது கண்களிலும் அருவி.
பெயர்க்காரணம்: கு என்றால் பிறவிப்பிணி. தாலம் என்றால் தீர்ப்பது.  இம்மையிலும் மறுமையிலும் உள்ள பிறவிப்பிணி பாவங்களை நீக்குமாம் இத்திருத்தல தரிசனம்.




மூலவர் குற்றாலநாதர் (சுயம்பு மூர்த்தி)

தாயார்: குழல் வாய் மொழி (என்ன அழகான பெயர்!) மற்றும் பராசக்தி (இரண்டு அம்மன் சன்னிதிகள்)

64 சக்திபீடங்களில் இது பராசக்தி பீடம்.

தல விருட்சம் : குறும்பலா  சுமார் 1300 வருடங்கள் பழமையான இந்தப்பலாவில் லிங்க வடிவ சுளைகள் கலியுக அதிசயம். வருடம் முழுவதும் காய்க்குமாம்.
.
பழமையான குற்றாலக்குறவஞ்சி சுளையெலாம்சிவலிங்கம் என்று  குறிப்பிடுகிறது.

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் திருத்தலங்களுள் இது 13 வது திருத்தலம்,.
வைணவத்திருத்தலமாக இருந்த இந்த கோவில் அகத்தியர் வழிபட்டு சைவத்திருத்தலமாக ஆனதாக வரலாறு.

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து 
தேவிபாகம் பொருந்தி பொருந்தாத வேடத்தால் 
காடுறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம் வினவில் 
ஏலங்கமழ் சோலையின வண்டுயாழ்செய் குறுந்த 
மணநாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்பலாவே

என்று

திருஞானசம்பந்தர் பதிகம் பாடியருளிய திருத்தலம்.

அமாவாசையன்று லட்சதீபம் ஏற்றுகிறார்கள்.
ஐந்து வாயில்கள் கொண்ட கோவில்.
பஞ்சபூதங்களையும் இங்கே தரிசிக்கலாம்.

சிவபெருமானின் ஐந்து சபைகளான  கனகசபை (பொன்) (சிதம்பரம்) வெள்ளிசபை (மதுரை), தாமிரசபை (நெல்லையப்பர்), சித்திர சபை (குற்றாலம்), ரத்தின சபை (திருவாலங்காடு) ஆகிய ஐந்துசபைகளில் இங்கே சித்திர சபையாக காட்சி தருகிறார்.

கோவிலுக்கு அருகில் சித்திர சபை தனிக்கோவில் அமைப்பில் உள்ளது. தாமிரத்தால் வேயப்பட்ட இந்த இடத்தில் திரிபுர தாண்டவ மூர்த்தியாக சித்திரத்தில் காட்சி அளிக்கிறார்.

என்ன காட்சியோ? ஒரே இருளோ ன்னு இருக்கு….செல்லுல இருக்கிற டார்ச் அடிச்சும் பார்க்கக்கூடாதாம். அவங்களும் லைட் போட்டு வைக்காம  (வரைந்திருக்கும் ஓவியம் ஒளிபட்டு வீணாகிடும் என்பதால் இருக்கலாம்) எப்படியோ ஒருவழியா “பார்”த்தோம்! இதைப் ”பார்க்க” பத்து ரூவா கட்டணம்.

கோவில் பிரகாரத்தில் மணக்கோல நாதர் காட்சி அளிக்கிறார். அம்பிகையை மணமுடித்த கோலத்தில் காட்சி அளிப்பதால் இந்தப் பெயர்.
மற்றும் பிரகாரத்தில் நன்னகரப்பெருமாள் என்ற பெருமாள் சன்னிதியும் உண்டு.

மார்கழி மாதத்தில் திருவாதிரை விழா தேரோட்டத்துடன் பத்து நாட்கள் நடக்குமாம்.  காலை மாலையில் இந்த விழாவில் நடராஜருக்கு தீபராதனை காட்டப்படும் போது ஸ்வாமியை நடனம் ஆடுவது போல மேலும் கீழுமாக ஆட்டுவார்களாம். இதற்கு தாண்டவ தீபாராதனை என்று பெயராம்

புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும், தோல்வியாதி தீரவும், தீராத தலைவலி தீரவும் இந்த அருவிக்குளியல் + குற்றாலநாதர் தரிசனம் மகத்தான பயன் தருவதாக கூறப்படுகிறது.

டட்டடாய்ங்க்… ஒரு சின்ன ப்ரேக் ல இட்லி, வடை சாம்பார் ன்னு முத்துக்குளிச்சு எழுந்தோம்.




தைலம், (குற்றால மூலிகைத்தைலமாம்) (நாப்பது ரூவா,.ஆலிவ் பச்சக்கலர் ல கொஞ்சம் நெடியா இருந்துது) எல்லா வலிக்கும் சர்வரோக நிவாரணியாம்!) ஜாதிக்காய் ஊறுகாயாம்….நூறு ரூவா ன்னு சொல்லி அறுபது ரூவாக்கு தருகிறார்கள். (நாமெல்லாம் சர்க்கரை பொங்கல் ல துளியூண்டு கிள்ளி நெய் ல வறுத்து போட வச்சிருப்பமே அதே ஜாதிக்காய் ல தான் ஊறுகாய்.) சும்மா கொஞ்சூண்டு கடிச்சு பார்த்தேன்….அப்டியே விர்ர்ர்ருன்னு இருந்துது…..யம்மாவ்…எனக்கு ஏற்கெனவே பச்சைக்கற்பூர பயம் உண்டு. இதில ஜாதிக்காயை ல்லாம் ஊறுகாயா சாப்ட்டா என்னாகறது ன்னு வாங்கலை.
ஆச்சா?

9 மணிக்கு குர்றாலத்திலிருந்து கிளம்பணும் ன்னு ஆக்சுவல் ப்ளான். ஆனா 11 மணியாச்சு கிளம்ப,. அடுத்து தாமிரபரணி குளியல். அது வேற இன்னொரு மாதிரியான பயம். தண்ணீர் ஒரு பயம் ன்னா, இப்ப புஷ்கர கும்பல் வேற இருக்குமே அது ஒரு பயம் + கூச்சம். ஆற்றுநீர் எப்படி இருக்குமோ… சரி, பார்த்துக்கலாம். அவ்ளோ கும்பல் ல்ல நம்பளைத்தானா பார்த்துக்கிட்டு இருக்கப்போறாங்க!!


ஆனால் …நாங்க போனதோ…………………………………………………………………………………………… ஆஹா!
அருள்மிகு கோமதி அம்பாள் ஸமேத நாறும்பூநாதர் கோவில். திருப்புடைமருதூர்.

."புடை" என்றால் வேர், மரத்தின் அடிப்பகுதி. மருதமரத்தை மையமாக வைத்து வழிபடும் சிவத் தலங்கள் மூன்று. மரத்தின் அடிப்பகுதியைக் கொண்ட திருப்புடைமருதூர். இடைப்பகுதியைக் கொண்ட திருவிடைமருதூர். மூன்றாவது ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம் [இந்தத்தகவல் திரு. மாலன் நாராயணன் அவர்களின் ஒரு பதிவிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்படுகிறது]


 கோவிலின் பின்புறம் அமைதியாக சலசலத்து ஓடுகிற தெள்ளத்தெளிவான தாமிரபரணி!  கும்பலே இல்லை. எங்களுடன் வந்திருந்த அத்தனை பேரும் கோவிலைச்சுற்றி ஆங்காங்கே பிரிந்து நீராட சென்றுவிட நாங்கள் நீராட சென்ற இடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குழந்தைகளும் பெண்களூமாக பத்து பேர் கூட இல்லை……மதிய நேரம்…..சுள்ளென்று அடிக்காத இதமான வெயில்…..நீராட அருமையான பொழுது…..நீச்சல் தெரியாதுதான். …படிக்கட்டெல்லாம் கூட இல்லை. இருந்தாலும் பயமுறுத்தாத நதியோட்டம்….ஹூர்ரே….ன்னு கத்திக்கிட்டே தொம் ன்னு குதிச்சு (ஆமாம் குதிச்சுதான்) குளிக்க ஆரமிச்சேன்….!




ரொம்ப ஆழமும் வேகமுமில்லாத நதி..முக்கியமா கும்பலே இல்லைங்கிறது அவ்ளோ ஆனந்தம்! சரி இப்ப கோவில் பற்றி ஒரு சின்ன அறிமுகம்.




இங்கும் சுயம்பு மூர்த்தியே.
மூலவர்: நாறும்பூநாதர்

உற்சவர்: பூநாதர்.

புராணப்பெயர்: புடார்க்கினியீஸ்வரர்

அம்பாள்: கோமதி அம்மன்

தலவிருட்சமம்: மருதமரம்.

ஸ்வாமி மன்னருக்கு அருள்புரிந்து காட்சி கொடுத்த 
இடத்தில் இன்னும் அந்த மருதமரம் உள்ளது.

தீர்த்தம்: தாமிபரணி.

இங்கு அருள்புரியும் சிவன் சாய்ந்த கோணத்தில் இருப்பது குறித்து இருவிதமான தலபுராணம் நிலவுகிறது.

ஒருமுறை மகா சிவபக்தரான கரூர் சித்தர் என்பவர் சிவனை தரிசிக்க தாமிபரணியின் வடகரைக்கு வந்தபோது கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக சிவனை தரிசிக்க இயலாமல் வாசமிகு மலர்கள் பூத்துக்குலுங்கிய மருதமரங்கள் சூழ நடுவில் நிற்கும் சிவனைக்கண்டு, நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நின்னைத்தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ என்று மனமுருகி பாடினாராம். சிவன் தனது இடது செவியில் காதை வைத்து சிரம் சாய்த்து அப்பாடலை வெகுவாக இரசித்து செவி மடுத்தாராம். எனவே சாய்ந்த சிரம்.

·   மற்றொன்று,  பிற்காலத்தில் இங்கே ஆட்சி புரிந்த வீரமார்த்தாண்ட மன்னர் ஒருமுறை மான்வேட்டையின் போது ஒரு மானை குறிவைக்க அது இந்த மருதமரத்தின் கீழ் ஓடி ஒளிந்ததாம். அம்பெய்த வலியுடன் மான் மரத்தில் ஒளிய, மரத்தை வெட்ட மன்னன் ஆணை பிறப்பிக்க, வெட்டியதும் அங்கே குருதி பீறிட்டு எழ அம்பு பட்ட காயத்துடன் மானாக வந்தது தாமே என சிவபெருமான் காட்சி அருளுவதாக இன்னொரு தகவல்.

·   காயம்பட்ட சுயம்பு மூர்த்தி ஆனதால் சந்தனாதி தைலம் மட்டுமே இங்கே அபிஷேகம் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது..

·   சுவாமிக்கு வலப்புறம் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை அகிலநாயகி கோமதி அம்மன்.

·  இன்னொரு தல வரலாறு:
ஒருசமயம் தேவர்கள் காசிக்கு ஒப்பான தலத்தை காட்டுமாறு வேண்ட சிவன் தனது பிரம்மதண்டத்தை தரையில் இடுமாறு கூற அது தாமிரபரணீயின் கரையில் திருப்புடைமருதூர் அருகே நின்றது. எனவே இது காசிக்கு ஒப்பான தலமாகவும் கருதப்படுகிறது.


அடுத்து
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் திருத்தலங்களுள் இது 14 வது திருத்தலமாகிய செப்பறை அழகிய கூத்தரை காண விரைந்தோம். தாமிரபரணி ஆரத்தியை,  கூட்டம் மற்றும் நேரமின்மை காரணமாக நின்று தரிசிக்க கொடுத்து வைக்கவில்லை.



தாமிரபரணியின் நீர் வற்றாமலிருப்பது குறித்து:
·    இந்நதி அகத்தியர் உண்டாக்கியது என்பது ஒரு புறமிருக்க,  இந்தக்கோவிலின் அமைப்பும் நெல்லையப்பருமே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக கோவிலின் அபிஷேக நீர் வடக்கு முகமாக விழும்படி கோமுகி அமைப்பு இருக்கும். இங்கே  மேற்கு முகமாக விழுமாறு அமைக்கப்படுள்ளது. புனித நீர்  தன் திசையில் விழுவதால் வருணன்  மகிழ்ந்து  இங்கே  எப்பொழுதும் நீர் வற்றாது  இருக்கும்படி மழை பொழிந்த
 அருள்வதாகவும் கூறுவர்.

தாமிரபரணீ ஆற்றின் வடகரையிலும் தென்கரையிலுமாக அமைந்திருக்கும் திருநெல்வேலி , பாளையங்கோட்டை என்னும் இரட்டைத்தலங்களூக்கு இடையே திருநெல்வேலியின் நடுநாயகமாக வீற்றிருக்கிறது நெல்லையப்பர் திருக்கோவில்.


மூலவர்: நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்த நாதர்) இங்கும் சுயம்பு மூர்த்தி.
அம்பாள்: காந்திமதி அம்மன், வடிவுடை அம்மன்.

தீர்த்தம்: பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண்புஷ்கரம்), கருமாறித்தீர்த்தம், சிந்துபூந்துறை.
இத்தலம் பஞ்சசபைகளுள் தாமிர சபையாகும். 
அதனால் செப்பரை அழகிய கூத்தர்.. 

96 தூண்கள் நிறைந்த ஊஞ்சல் மண்டபம்,, மகா மண்டபம், நவக்கிரக மண்டபம்,, சோமவார மண்டபம்,, சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம்,ஆகிய மண்டபங்களில் அழகிய சித்திரங்கள் நிறைந்து காணப்படுகின்றனவாம். நாங்கள் பார்க்க முடியவில்லை.

வேதபட்டர் என்பவர் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய உலரப்போட்டிருந்த நெல், மழையினால் சேதம் அடையாமல் வேலியாக நின்றாராம் நெல்லையப்பர். எனவே இவ்வூருக்கு திரு நெல்வேலி என்ற பெயர்க்காரணம். (எங்கள் நெய்வேலிக்கு யாரேனும் சரியான பெயர்க்காரணம் கூறினால் சிறப்பு பரிசாக தாமிர டவரா டம்ளர் உண்டும்!)

நாட்டியலேயே மூன்றாவது பெரிய திருத்தேர் நெல்லையப்பர் திருத்தேர். அரியநாத முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட இரத வீதிகளில் 1505 ஆண்டு முதன்முறையாக இரத வெள்ளோட்டம் விடப்பட்டதாம்.

மற்றொரு விசேஷம். நவக்கிரகங்களில் எப்போதும் கிழக்கு திசை நோக்கியே இருக்கும் கல்விக்கு அதிபதியான புதன் இங்கே குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பது அரியதும் சிறப்பானதும் ஆகும்.

இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் சன்னதியில் 12 துளைகளுள்ள ஜன்னல் உள்ளது. குழந்தை வரம் வேண்டி இங்கு நேர்ந்து கொள்பவர்கள் குழந்தை பிறந்ததும் இந்த ஜன்னல் வழியாக கொடுத்து வாங்கி வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்துவார்களாம்.

இங்கு அம்மனுக்கு வெண்ணிற ஆடை அணிவித்து அர்த்தஜாம பூஜை நடக்கும். மறுநாள் காலை 7 மணிக்கு விளாபூஜை நடக்கும் வரை அம்மன் இந்த வெண்ணிற ஆடையுனே காட்சி தருகிறாள். இறுதிக்காலத்தில் உலகம் முழுவதும் தன்னிடம் ஐக்கியமாவதை உணர்த்துவதாக இந்த காட்சி என்று கூறப்படுகிறது.

அபிஷேக நேரத்தில் லிங்கத்தின் நடுவில் அம்பாள் இருப்பதை காண முடியும். தங்கையை மணந்த சிவனை, பெருமாள், தன் மார்பில் தாங்கியதாக கூறப்படும் விஷ்ணுவின் மார்பில் சிவலிங்கம் இருப்பதையும் இங்கு காணலாம்.

வாழ்வில்

முதன் முறையாக

இரண்டு புனித நீராடி

மூன்று சுயம்பு மூர்த்திகளை தரிசித்து

நான்கு வேத சாரங்களில்

பஞ்ச சபைகளில் இரண்டையும்

ஆறுதலாய் தரிசித்து

ஏழேழ் பிறவிக்குமாய்

பிறவிப்பிணி நீக்க யாம் சென்று வந்த

இக்கதை படித்தோரும் கேட்டோரும்

அஷ்டதிக்குகளையும் வென்று

நவநிதிகளூம் பெற்று

பாரில் பலவகை இன்பங்களும் பெற்று

பல்லாண்டு வாழ்வீர்காள் என இப்போதைக்கு விடை பெறுகிறேன்
டாட்டா!!….பை!! பை!!